Tamilnadu

சென்னையில் போராட்டம் நடத்த தடை : மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க எடப்பாடியின் காவல்துறை முயற்சி!

டெல்லியில் இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் பல்வேறு அமைப்பினர் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சாலை மறியல், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி ஆகிய வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சென்னை போலிஸார் போராட்டங்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், சென்னையில் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் உட்பட எந்த இடங்களிலும் தமிழ்நாடு சிட்டி போலிஸ் சட்டம் 41ன்படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனிதச் சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்த அரசியல் கட்சியினருக்கு மற்றும் அமைப்பினருக்கு அடுத்த 15 நாட்களுக்கு காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, ராஜரத்தினம் மைதானம் போன்ற இடங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டம் போட்ட கட்சியினர் மற்றும் அமைப்புகளுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 28-ம் தேதி இரவு முதல் மார்ச் 14-ம் தேதி இரவு வரை அனுமதி மறுக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நடக்கக்கூடிய மதம் சார்ந்த நிகழ்ச்சி, திருமண ஊர்வலம், மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம் என காவல் ஆணையர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

போலிஸாரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மோடி அரசு என்ன செய்தாலும் ஆதரவாகச் செயல்படும் எடப்பாடி அரசு போராட்டங்களை ஒடுக்குவதற்கு இத்தகைய அடக்குமுறையை கையாள்வதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “டெல்லி வன்முறையின்போது செயலற்று நின்ற போலிஸ்” : மோடி அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையர் ஆவேசம்!

மேலும், கடந்த ஜனவரி மாதமும் இதேபோன்ற அறிவிப்பை சென்னை காவல்துறை வெளியிட்டது. அதுமட்டுமின்றி, நேற்றைய தினம் சென்னை பா.ஜ.க போராட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டு இன்றைய தினம் இந்த உத்தரவை சென்னை போலிஸ் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் தலையிட்டு இதற்கு தீர்வை எட்டவேண்டும் என ஜனநாயக அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.