Tamilnadu

"அதிகார பரவலாக்கம் மூலம் சமூகநீதிக்காகப் பாடுபட்டது திராவிட இயக்கம்” - ஜே.என்.யூவில் ஊடகவியலாளர் பேச்சு!

“திராவிட இயக்கம் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல நல்ல சீர்திருத்தங்களை கொண்டு வந்தது” என டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே பேசிய ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் வாசகர் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளின் மாணவர்கள், பேராசிரியர்கள், டெல்லியின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த தமிழ் பிரமுகர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் ‘சுயமரியாதை திராவிட இயக்கமும், இந்திய கூட்டாட்சியும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் வாசகர் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் .

இந்தியாவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பினையும் தாக்கத்தையும் பற்றி அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு :

"1919ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அமலாக்கப்பட்டது. இதில், பெரும்பான்மை சமுதாய மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வதாக இல்லை. இந்நேரத்தில் 1916இல் பிராமணர் அல்லாத இயக்கம் உருவெடுத்தது.

1920இல் தமிழகத்திற்கு நீதிக்கட்சி ஆட்சிக்கும் வந்தது. அப்போது அந்த அரசு அனைத்து சமுதாய மக்களுக்கும் காலியான அரசு பணியிடங்களில் அமர்த்தவேண்டும் என வலியுறுத்தி அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டது. இது, 1927ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டது.

1921இல் நீதிக்கட்சியினரே பெண்களுக்கும் வாக்குரிமை என்பதை நடைமுறைக்கு முதன்முதலாக கொண்டு வந்தார்கள். இதுபோன்ற பல சீர்திருத்தங்களை திராவிட இயக்கத்தினர் கொண்டு வந்தனர்.

திராவிட இயக்கம் கடந்த நூற்றாண்டுகளில் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல நல்ல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் மூலம் பொதுமக்களிடம் சமூகநீதி நிலைக்கப் பாடுபட்டுள்ளது.

இதுபோன்ற சாதனைகளுக்காக திராவிட இயக்கத்தின் தலைமை இரண்டுவகை கொள்கைகளை பின்பற்றினர். இதற்காக அவர்கள் அவசியப்படும் நேரங்களில் எந்த நிபந்தனையும் இன்றி ஏற்புடைமை கொள்கையையும் பின்பற்றி உள்ளனர்.

Also Read: ‘திராவிட இயக்கத்தின் மகத்தான முன்னோடி’ : டாக்டர் சி.நடேசனார் நினைவு தினம் இன்று!

1916 முதல் 1936 வரை திராவிட இயக்கம் ஒரு கருவாக உருவானது. இந்த கட்டத்தில் அது சமூகத்தில் உள்ள பிரச்னைகளை அடையாளம் காண்கிறது. இதன் அடுத்த இருபதாண்டுகளில் திராவிட இயக்கத்தினர் தம் எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

இதில், குறிப்பாக தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை பெரிதாக இடம்பெற்றது. பேரறிஞர் அண்ணா ஆட்சியிலும் தமக்கு பங்கு இருக்கவேண்டும் என முன்வைக்கிறார்.

இரண்டாவது இருபதாண்டுகளில் மூன்று முக்கியமான அம்சங்கள் திராவிட ஆட்சியில் நடைபெற்றன. இதில், மொழி உரிமை, சமூக நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.” எனப் பேசியுள்ளார்.