Tamilnadu
”முஸ்லிம் எதிர்ப்பு தான் RSS-ன் நிலைப்பாடு, அதை ஏன் மறைக்க வேண்டும்?” - தமிழக அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’
“இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை 'இந்து மகா சபா' மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்தது” என பத்தாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்றை ஏன் நீக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், பாட புத்தகத்தில் இருந்து இந்த வாசகங்களை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திரசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் தனி நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இனிமேல் அச்சடிக்கப்படும் புத்தகங்களில் இந்த வாசகங்கள் நீக்கப்படும் எனவும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் இந்த வாசகங்கள் மறைக்கப்படும் என விளக்கமளித்த தமிழக அரசு, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும் ஆர்.எஸ்.எஸ் குறித்த அந்த வரலாற்று வாசகங்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க தடை கோரியும் தந்தை பெரியார் திராவிட கழக துணை தலைவர் துரைச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர், கோல்வார்கள் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாறு என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ் குறித்து பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்றை எப்படி மறைக்க முடியாதோ, அதேபோலதான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்ததையும் மறைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.
மேலும், இது போன்ற வரலாறுகளை பாட புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மார்ச் 19ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!