Tamilnadu

“கர்ப்பிணி மகள் மீது தந்தையே ஆசிட் வீசிய கொடூரம்” - போலிஸ் வலைவீச்சு!

காதலிக்க மறுத்தால் பெண் மீது ஆசிட் வீசுவதும், காதலித்தவரை கரம்பிடித்தால் பெற்றோர்கள் ஆணவப் படுகொலை செய்யும் கொடுமையும் நிகழ்கிறது. இதுபோன்ற பாதகச் செயல்களைத் தடுக்க எந்தச் சட்டமும் இல்லாததால் மீண்டும் மீண்டும் பெண்களின் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் மேற்குறிப்பிட்ட சம்பவங்களைப் போலவே கொடூரமானது. வேப்பம்பட்டு பகுதி கர்ப்பிணி பெண் மீது பெற்ற தந்தையே ஆசிட் வீசியுள்ள சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.

காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் வேப்பம்பட்டைச் சேர்ந்த பாலகுமார். இவரது மகள் தீபிகா, அதேபகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பவரை காதலித்திருக்கிறார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும், சாய்குமாரையே மணந்த தீபிகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், தீபிகா இருக்கும் இடத்திற்குச் சென்ற அவரது தந்தை பாலகுமார், தனது வீட்டுக்கு வரும்படி அழைத்ததற்கு தீபிகா மறுத்துள்ளார். அதன் பின்னர், 4 பேர் கொண்ட கும்பலுடன் ஆண்கள் எவரும் இல்லாத சமயத்தில் தீபிகா வீட்டுக்கு மீண்டும் சென்றிருக்கிறார் பாலகுமார்.

அப்போது, தன் எதிர்ப்பை மீறி சாய்குமாரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தோடு இருந்த பாலகுமார் கர்ப்பிணியான தீபிகாவின் முகத்தில் ரசாயன பவுடரை வீசியுள்ளார். அப்போது தடுக்க வந்த சாய்குமாரின் தாய் மற்றும் கர்ப்பிணியான அவரது அண்ணி மீதும் ஆசிட்டை வீசியுள்ளனர் பாலகுமாரும் அவரது கூட்டாளிகளும்.

அதன் பிறகு, சுருண்டு விழுந்த தீபிகாவை தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்ற பாலகுமார் நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பித்திருக்கிறார். இதுதொடர்பாக தகவலறிந்து விரைந்த சாய்குமார் தீபிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதற்கிடையே, பாலகுமார் மற்றும் கூட்டாளிகளின் வெறிச்செயல் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலிஸிடம் புகாரளித்திருக்கிறார் சாய்குமாரின் தந்தை பாலாஜி. சாய்குமாரை விட்டு வராவிடில் கொன்று விடுவேன் என பாலகுமார் மிரட்டியதாக சிகிச்சையில் இருக்கும் தீபிகா போலிஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, பாலகுமார் உள்ளிட்ட ஐவர் மீதும் வழக்குப்பதிவு செய்த செவ்வாய்ப்பேட்டை போலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.