Tamilnadu

ஐகோர்ட்டை இழிவாகப் பேசிய விவகாரம் : எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணை!

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்துப் பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்துப் பேசியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த தகராறு தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக துணை தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான துரைசாமி, "மத்தியில் ஆளும் பா.ஜ.க கட்சியின் தேசிய செயலாளர் என்பதால் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க காவல்துறை தயங்குகிறது. ஆகவே வழக்கை விசாரித்து, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, 2 மாதத்திற்குள் எச்.ராஜா குறித்த வழக்கு மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய திருமயம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Also Read: ஹைகோர்ட்டைத் திட்டி மன்னிப்புக் கேட்ட ஹெச்.ராஜா : சம்பவம் நடந்து ஓர் ஆண்டு - கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !