Tamilnadu

"மதநல்லிணக்கம் போற்றும் பிரியாணி விருந்து" : திண்டுக்கல்லில் அசத்திய இஸ்லாமியர்கள்!

திண்டுக்கல் நாகல் நகரில் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசலில் முகமது நபி, ரசரூல்லா சல்லாகி ஆகியோரின் நினைவாக ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும்.

இந்த விழாவின் ஒருபகுதியாக, மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக இஸ்லாமிய மக்கள் நாகல் நகர் பள்ளிவாசல் சார்பில் ஒற்றுமை விருந்து ஏற்பாடு செய்வார்கள். அந்த விருந்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மத பாகுபாடின்றி, பிரியாணி சமைத்து விருந்து அளிப்பார்கள்.

அதன்படி இந்தாண்டும் முகமது நபி, ரசரூல்லா சல்லாகி ஆகியோரின் நினைவாக ஒற்றுமை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக, 1000 கிலோ ஆட்டுக்கறி, 2,000 கிலோ அரிசி, 30,000 முட்டைகள் கொண்டு கைமா பிரியாணி தயார் செய்யப்பட்டது.

இதற்காக நேற்று முன்தினம் பிரியாணி சமையல் கலைஞர்கள் 100 பேரின் முயற்சியில் பிரியாணி தயார் செய்யப்பட்டது. பொதுமக்கள் வீட்டிருந்து பாத்திரங்கள் கொண்டுவந்தும் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.

காலை 6 மணிக்குத் தொடங்கிய விருந்து மதியம் 3 மணி வரை நீடித்தது. அதுமட்டுமின்றி, சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து மக்கள் பிரியாணியை வாங்கிச் சென்றனர். இஸ்லாமியர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெரிதும் வரவேற்பு அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு இந்துத்வ கும்பல் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மத நல்லிக்கணத்தைப் போற்றும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “குடியுரிமை சட்டத்திற்கு இஸ்லாமியர் ஆதரவா?” : முஸ்லிம் பெயரில் இந்துத்வா கும்பலின் பொய் பிரசாரம் அம்பலம்!