Tamilnadu
கோவை பெட்ரோல் பங்க் ரகசிய கேமரா வழக்கில் அதிர்ச்சி திருப்பம் : மூவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
கோவையைச் சேர்ந்த ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மனைவியுடன் பணியாற்றி வந்தார். அதே பங்க்கில் பணியாற்றிய சுபாஷ் என்ற இளைஞர், அங்கு வேலை செய்யும் பெண்கள் உடை மாற்றும் அறையில், தனது மொபைல் போன் கேமராவை மறைத்து வைத்து ரகசியமாகப் படம் எடுத்துள்ளார்.
இதை அறிந்துகொண்ட பெண், தனது கணவரிடம் இதுகுறித்துக் கூற, அவர் சுபாஷுடன் சண்டை போட்டு அவரிடமிருந்து செல்போனைப் பிடுங்கி அந்தக் காட்சிகளை தனது செல்போனுக்கு அனுப்பிக்கொண்டு அழித்தார். மேலும், பங்க் உரிமையாளர்களிடம் புகார் தெரிவித்தார்.
பெண்கள் உடை மாற்றுவதை ரகசியமாகப் படம் பிடித்த சுபாஷ் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பெட்ரோல் பங்க்கில் எடுக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் போலிஸில் புகார் அளித்தனர்.
கோவை போலிஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுபாஷ் எடுத்த வீடியோவை, தனது செல்போனில் ஏற்றிக்கொண்ட ஊழியர் அதை முழுவதும் அழிக்காமல், தனது செல்போனில் பாதுகாத்து வைத்திருந்தார். சில மாதங்கள் கழித்து தனது நண்பரிடம் அந்தக் காட்சிகளைப் பகிர, அவர் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது தெரியவந்தது.
ரகசிய வீடியோ எடுத்தவர், அதைக் கைப்பற்றி நண்பருக்கு பகிர்ந்தவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் என 3 பேரையும் கைது செய்த போலிஸார் பெண்கள் குறித்து அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை போலிஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டதன் பேரில் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!