Tamilnadu

சென்னையில் 6 இடங்களிலிருந்து வெளியூர்களுக்கு கிளம்பும் பேருந்துகள் : விபரங்கள் பெற உதவி எண் அறிவிப்பு!

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 3,525 பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி நகராட்சி பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து 12,13,14 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் 4950 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட நாட்களில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து சேலம், மதுரை திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு முறையே 1974 மற்றும் 1474 பேருந்துகள் இயக்கப்படும்.

பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர் திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 602 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதால் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

வழித்தட மாற்றம் :

முன்பதிவு செய்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி நாசரேத்பேட்டை, அவுட்டர் ரிங் ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு சிறப்பு மையங்கள் :

கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம்- 15

தாம்பரம் சானடோரியம்- 1

பூந்தமல்லி பேருந்து நிலையம் -1

பூந்தமல்லி மற்றும் Mepz முன்பதிவு மையங்கள் ஒன்பதாம் தேதி முதல் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்குப் பின் பிற ஊர்களில் இருந்து 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்து ஏனைய பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பொங்கலுக்கு பின்பு சேலம், மதுரை ,திருச்சி தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் முறையே 1,200 மற்றும் 1,525 பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு பின்பு சேலம் திருவண்ணாமலை வேலூர், சென்னை, கரூர் திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக 9445014450, 9445014436 ஆகிய இரு சிறப்பு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் ஆம்னி பேருந்து அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.

சிறப்பு பேருந்து நிலையம் விவரம்

1)மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

2)கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

3) தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக விக்ரவாண்டி பண்ருட்டி செல்லக்கூடிய பேருந்துகள்.

4)தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர் சேத்துப்பட்டு வந்தவாசி செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி வடலூர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

5) பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் ஆரணி ஆற்காடு திருப்பத்தூர் காஞ்சிபுரம் செய்யாறு ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

6) கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் : மயிலாடுதுறை நாகப்பட்டினம் வேளாங்கண்ணி திருச்சி மதுரை திருநெல்வேலி செங்கோட்டை தூத்துக்குடி திருச்செந்தூர் நாகர்கோயில் கன்னியாகுமரி திருவனந்தபுரம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி காரைக்குடி புதுக்கோட்டை திண்டுக்கல் விருதுநகர் திருப்பூர் ஈரோடு ஊட்டி ராமநாதபுரம் சேலம் கோயம்புத்தூர் எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்.

வழக்கத்துக்கு மாறாக அதிக பேருந்துகள் இயக்கப்படும் காரணத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையம் முதல் அதனைச் சுற்றி உள்ள சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்லமுடியாமல் வரிசையாக நிற்க வைத்து பின்னர் நீண்ட நேரம் கழித்து வெளியில் எடுத்துச் செல்லப்படுகிறது.

Also Read: பொங்கல் விடுமுறை முடிந்து ரயிலில் சென்னை திரும்புவோர் எப்போது புக் செய்யலாம்?