Tamilnadu

‘ஹாங்காங்குக்கு பரிமாற்றம் செய்த ரூ.1038 கோடி யாருடையது?’ : சி.பி.ஐ வலையில் சிக்கிய சென்னை நிறுவனங்கள்!

சென்னையிலிருந்து ஹாங்காங்கிற்கு 1,038 கோடி ரூபாய் கருப்புப்பணம் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 48 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில் இந்த ஹாங்காங் பணப்பரிமாற்றம் வழக்கை கையில் எடுத்துள்ளது சி.பி.ஐ.

அதன்படி, கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் இருந்து சென்னையை சேர்ந்த மூன்று பேரும் , 48 நிறுவனங்களும் போலி ஆவணங்களை கொண்டு 51 நடப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

அவற்றின் 24 கணக்கிலிருந்து ஹாங்காங்கிற்கு 488 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது. ஹாங்காங்கில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முன்பணம் எனக் கூறி வங்கி அதிகாரிகளின் துணையுடன் இந்த பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால், பத்து நிறுவனங்கள் மட்டுமே பெயரளவுக்கு சிறிய அளவில் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது என சி.பி.ஐ கூறியுள்ளது. மேலும், அந்த நிறுவனங்கள் ஹாங்காங்கிற்கு அனுப்பிய தொகைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்புக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 27 கணக்குகளில் இருந்து ஹாங்காங்கிற்கு 550 கோடி ரூபாய் கருப்புப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகை முழுவதும் அமெரிக்க டாலர்களாக வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் இந்த 48 நிறுவனங்களில் 24 நிறுவனங்கள் போலியானவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 48 நிறுவனங்கள் மற்றும் மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.