Tamilnadu

அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் தோல்வி... முடிவை அறிவிக்கவிடாமல் அமளி!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் நடுகொம்பை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் மகன் யுவராஜ், தி.மு.கவைச் சேர்ந்த அழகப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வி அடைந்தார்.

தேர்தல் அதிகாரி, அழகப்பனின் வெற்றியை அறிவித்துக் கொண்டிருந்தபோது, வெற்றி பெற்றதை அறிவிக்கக்கூடாது எனப் பாய்ந்து சென்று தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் யுவராஜ். அவருடன் அ.தி.மு.கவினரும் தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் நடுகொம்பை ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

இதேபோல, திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வியடைந்தார். இராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர்ராஜாவின் மகள் அதவியா தி.மு.க வேட்பாளரிடம் 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதுபோல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

Also Read: #LIVE : வாக்கு எண்ணிக்கை நிலவரம் : முடிவுகளை அறிவிக்கவிடாமல் முறைகேட்டில் ஈடுபடும் அ.தி.மு.கவினர்!