Tamilnadu

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : புது புயல் உருவாகிறதா? - நாளைய வானிலை நிலவரம்!

தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இடையில் சில நாட்கள் மழை பெய்யாததால் அதிருப்தியில் இருந்த மக்கள் நேற்று மழை பெய்ததும் குஷியாகியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், தமிழக, கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாமக்கல், தூத்துக்குடி, சேலம், ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல, அடுத்த 24 மணிநேரத்திற்கு அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கும் என கூறியுள்ளார்.

மேலடுக்கு சுழற்சியால் தற்போது வரை புயல் உருவாக எந்த வாய்ப்பும் இல்லை என கூடுதல் தகவலளித்துள்ளார்.