Tamilnadu

“பி.இ பட்டதாரிகள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்” - ஆணை பிறப்பித்த தமிழக அரசு!

தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுதலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய தொழில்நுட்பப் புரட்சிகளாலும், கட்டுமானப் புரட்சிகளாலும் பொறியியல் துறை மீதான மோகம் வெகுவாக அதிகரித்தது. அதன் காரணமாக சமீப சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு முடித்த பெரும்பாலானோர் பொறியியல் படிப்பையே தேர்ந்தெடுத்தனர்.

ஆனால், பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால், பலர் வேலையின்மை நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது. இதனால், வேலைவாய்ப்புக்காக எத்தகு வேலையையும் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் பொறியியல் பட்டதாரிகள். தமிழக அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் லட்சக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகள் பங்கேற்பதே இதற்குச் சான்று.

இதனால், தற்போது பொறியியல் மோகம் வெகுவாகக் குறைந்து தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொறியியல் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆவதற்கு வாய்ப்பாக, 2015 - 2016ம் ஆண்டுகளில் பி.எட் கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்கள் பொறியியல் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் அதிகம் சேராததால் இந்த எண்ணிக்கை 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பணி புரிவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம். பி.எட் ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆசிரியராக பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பொறியியல் பட்டப்படிப்பு படித்து, பி.எட் முடித்தவர்கள் இனி TET எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் எழுதி 6 முதல் 8 வகுப்புகளுக்கு கணித ஆசிரியராகலாம் என சமநிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Also Read: பாதி கூட நிரம்பாத பொறியியல் கல்லூரி இடங்கள்... சில கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை : என்ன காரணம்?

பி.இ பட்டப்படிப்புகளில் எந்தப் பிரிவில் பயின்றிருந்தாலும் இந்த டெட் தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொறியியல் பட்டதாரிகள் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றாலும், கலை அறிவியல் பயின்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.