Tamilnadu

தமிழகத்திற்கு நாளை மிதமான மழை.. அப்போ சென்னையில்? - வானிலை நிலவரம்!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தொடர்ந்து நிலவுகிறது.

இதனால் அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் அந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யும் எனக் கூறியுள்ளார்.

Also Read: சென்னை மெரினா கடற்கரையில் மலைமலையாக ஒதுங்கும் நுரை... காரணம் என்ன?