Tamilnadu

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

அனைத்துப் பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020-ம் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் ஆணையிட்டது.

முன்னதாக இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி என்பதால் மாணவர்களின் கல்விதிறன் பாதிக்கப்படுகிறது எனக் கூறி, புதிய சட்டத் திருத்தம் மூலம் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்தது.

அதன்படி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வும், தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடித் தேர்வும் நடத்தப்படும். அந்தத் தேர்விலும் மாணவர்கள் தோல்வியடையும் பட்சத்தில் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை அறிவிப்பிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், மாநில அரசு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வைக் கொண்டுவந்துள்ளது.

தற்போது, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு நடத்துவதற்கான தேர்வு தேதியை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடைகிறது. அதேபோல், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி முடிவடைகிறது.

5-ம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது எனவும், 8-ம் வகுப்பிற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.