Tamilnadu
மகன் திருமணத்திற்காக 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ் - 28 ஆண்டுகளில் இதுவே முதன்முறை!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சிறை நிர்வாகம் ராபர்ட் பயாஸ் மனுவை பரிசீலிக்காததால் பரோல் அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, பரோல் கோரிய விண்ணப்பத்தில் மனுதாரர் தான் தங்க இருக்கும் முகவரியை தெரிவிக்காததால், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும், தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயாஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலினையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் பயாஸுக்கு பரோல் வழங்க ஆட்சேபம் இல்லை என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மகனின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ராபர்ட் பயாஸூக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பரோல் காலத்தில் விதிகளின்படி மனுதாரர் செயல்பட வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் பரோல் காலத்தில் விதிகளை மீறினால் சிறை விடுப்பை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் பரோல் காலத்தில் மனுதாரர் 30 நாட்கள் கொட்டிவாக்கத்தில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பரோல் வழங்கப்பட்டது. இந்த உத்தரவின் பேரில் புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் சென்றார்.
28 ஆண்டு கால சிறை வாழ்வில் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக முதன்முறையாக ராபர்ட் பயாஸ் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!