Tamilnadu
திருட்டு பயத்தால் பழைய பேப்பரில் மறைத்துவைத்த நகைகளை தவறுதலாக எடைக்கு போட்ட பெண் - விரைந்து மீட்ட போலிஸ்!
ராசிபுரம் அருகே பழைய பேப்பர் கட்டுகளுடன் கவனக்குறைவாக தங்க, வைர நகைகளையும் எடைக்குப் போட்டுவிட்ட பெண்ணிடம் நகைகள் பத்திரமாக திரும்பவும் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரது மனைவி கலாதேவி (45). கலாதேவி கடந்த 20-ம் தேதி மதியம் அப்பகுதி வழியாக சென்ற பழைய பேப்பர் வாங்குபவரிடம், வீட்டில் இருந்த பழைய பேப்பர், நோட்டுப் புத்தகம், பிளாஸ்டிக் டப்பா உள்ளிட்ட பொருட்களை எடைக்கு போட்டுவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக்கொண்டார்.
பழைய பேப்பர்காரர் அங்கிருந்து சென்ற பிறகு இரவில், திருட்டு பயம் காரணமாக பழைய பேப்பர்களுக்கு நடுவே தனது 15 பவுன் தங்க, வைர நகைகளை வைத்திருந்தது கலாதேவிக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் விசாரித்து பழைய பேப்பர் வியாபாரியைத் தேடினார்.
அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் மறுநாள் காலை ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கலாதேவியின் புகாரின் பேரில் போலிஸார் துரிதமாக செயல்பட்டு முக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பழைய பேப்பர் வாங்கும் கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கலாதேவியிடம் பேப்பர் வாங்கிச் சென்றது சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே ராமன் காட்டில் உள்ள செல்வராஜ் (55) என்பவர் எனத் தெரிய வந்தது.
பின்னர், வாங்கி வந்த பேப்பர் கட்டுகளை பிரித்துப் பார்த்தபோது பழைய பேப்பர்களின் இடையே கலாதேவி வைத்திருந்த தங்க, வைர நகைகள் அப்படியே இருந்தன. இதையடுத்து அவரை அழைத்துக்கொண்டு காவல்துறையினர் ராசிபுரம் வந்தனர்.
டிஎஸ்பி விஜயராகவன் முன்னிலையில், மீட்ட நகைகளை கலாதேவியிடம் போலிஸார் ஒப்படைத்தனர். பழைய பேப்பர் கடைக்காரர் செல்வராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நேர்மையை பாராட்டிய கலாதேவி, அவருக்கு 10,000 ரூபாயை அன்பளிப்பாக வழங்கினார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!