Tamilnadu

'திருநங்கை' எனும் வார்த்தையை தமிழக அரசு ஆவணங்களில் இருந்து நீக்க முடிவு ? - காழ்ப்புணர்ச்சி காரணமா ?

தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, மூன்றாம் பாலினத்தவர்களை ’திருநங்கைகள்’ என அழைக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அந்த வார்த்தையே அவர்களைக் குறிக்க அரசு ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டது. திருநங்கை, திருநம்பியர் எனும் வார்த்தைகள் அவர்களின் வாழ்வில் சந்தித்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாய் அமைந்தது.

இந்நிலையில், அ.தி.மு.க அரசாங்கம் திருநங்கை என்ற வார்த்தையை அரசு பதிவுகளில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

‘சிறந்த திருநங்கைகளுக்கான விருதுக்கு’ பரிந்துரைகளை அனுப்புவதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருநங்கை/கள்" தட்டச்சு செய்யப்பட்ட இடங்கள் அடிக்கப்பட்டு, அவற்றின் மேல் மூன்றாம் பாலினத்தவர் என கையால் எழுதப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து சமூகநலத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, திருநங்கைகளை தமிழில் மூன்றாம் பாலினத்தவர் என குறிப்பிடவேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததாகவும், அதனால் தான் இவ்வாறு செயல் படுவதாகவும் தெரிவித்தனர்.

அ.தி.மு.க அரசாங்கம் திருநங்கை என்ற வார்த்தையை அரசு பதிவுகளில் பயன்படுத்த தடை விதித்துள்ளது திருநங்கைகளிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கைகளுக்கு கலைஞர் அளித்த மரியாதையான வார்த்தை என்பதாலேயே, அதனை அ.தி.மு.க அரசு புறக்கணித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், அரவாணிகள் என்ற பெயரால் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு திருநங்கைகள் என்ற பெயரை சூட்டி பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். திருநங்கைகள் என்ற பெயர் சூட்டப்பட்டதற்கு முன்னர், பின்னர் என்ன பிரித்துப் பார்க்கும் அளவிற்கு திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளது.

திருநங்கைகள் பெயரை தற்போது மாற்றும் முயற்சியாக, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்திட்டு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மூன்றாம் பாலினத்தவர் என வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் இல்லையென்றால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் '' எனத் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு இதுவோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.