Tamilnadu

பூர்விகா செல்போன் நிறுவனத்தில் நூதன முறையில் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர் கைது!

செல்போன் கடைகளில் முழுத்தொகையும் கொடுத்து செல்போன் வாங்க முடியாதவர்கள், க்ரெடிட் கார்டு மூலமாக கடன் பெற்று தவணை முறையில் பணம் செலுத்தி செல்போன் வாங்கமுடியும்.

இதே போன்று சில நிதி நிறுவனங்கள் பிரபல செல்போன் கடைகளிடம் இணைந்து வாடிக்கையாளர்கள் செல்போன் வாங்குவதற்கு கடன்சேவை அளித்தும் வருகின்றனர்.

அந்த அடிப்படையில் பூர்விகா நிறுவனம், டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ஹோம் க்ரெடிட் பைனான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன்படி பூர்விகா செல்போன் கடை கிளைகளில் இந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் கடன் வழங்கும் சேவையை பொதுமக்களுக்கு அளித்து வந்துள்ளனர். மயிலாப்பூரில் உள்ள பூர்விகா கடையில் கடன் அளிப்பதற்காக இந்த நிறுவனத்தின் சார்பில் சாந்தகுமார் என்ற ஊழியர் பணி புரிந்து வந்துள்ளார்.

சாந்தகுமார் நூதனமுறையில் நிதி நிறுவனத்தை மோசடி செய்து பல லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. இந்த மோசடியை நிதி நிறுவனமே கண்டறிந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. விசாரணையில் கடந்த ஒரு வருடமாக அவர் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சாந்தகுமார்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிதி நிறுவனத்தில் சேர்ந்த சாந்தகுமார்,பூர்விகா செல்போன் கடைகளுக்கு தனது நண்பர்கள், உறவினர்கள், காதலி ஆகியோரை செல்போன் வாங்க வருமாறு கூறியுள்ளார். அவர்கள் செல்போன் தேர்ந்தெடுத்த உடன் தவணை முறையில் பணம் செலுத்துவதாக கூறுவர்.

சாந்த குமார் இவர்களிடம் உரிய ஆவணங்களைப் பெற்று,முன் பணமாக 3,000 ரூபாய் வாங்கிக் கொள்வார். கடன் வழங்குவதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாக கூறியவுடன், பூர்விகா நிறுவனத்தினர் வாடிக்கையாளரிடம் செல்போன் வழங்குவர். அதன்பின் கடன் வழங்குவதற்கான அனுமதியை சாந்தகுமார் ரத்து செய்துவிடுவார்.

அதன் பின் செல்போனை வாங்கிச் சென்றவர்களிடம் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வாங்கிக் கொள்வார். ஆனால் நிதி நிறுவனம் அனுமதி அளித்ததால் தான் பூர்விகா நிறுவனம் செல்போன் வழங்கியதால், நிதி நிறுவனம் முழுத்தொகையை செலுத்தி விடும். இது போன்று நிதி நிறுவனத்தைப் பயன்படுத்தி 17 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

இவர் மோசடி செய்வது தெரியவந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நிதி நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அதன் பின் மயிலாப்பூர் கிளைக்கு வரும் அந்த நிதி நிறுவனத்தின் மற்ற ஊழியர்களுக்கும், இந்த மோசடியைக் கற்றுக் கொடுத்து தொடர்ந்து மோசடி செய்துள்ளார்.

வரவு செலவு கணக்கு பார்க்கும்போது தான் பெரிய அளவில் மோசடி நடந்தது நிதி நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது. இதில் பலரும் சம்பந்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை 33 பேருக்கு செல்போன் வாங்கியதாக கடன் அளித்து மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மோசடிகள் செய்யப்பட்டிருக்கலாம் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாந்தகுமாருக்கு அடுத்து பணிபுரிந்த நவீன் ப்ரியன், சரவணன், பிரகாஷ் ஆகியோரும் மோசடி செய்துள்ளதை விசாரணையில் சாந்தகுமார் விசாரணையில் ஒப்புகொண்டுள்ளார்.

சாந்த குமாரை கைது செய்த போலிஸார் மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து பூர்விகா நிறுவனம் ஹோம் க்ரெடிட் பைனான்ஸ் நிறுவனத்துடன் தனது ஒப்பந்தத்தை முழுவதுமாக ரத்து செய்துள்ளது.