Tamilnadu

ஹெல்மெட் இல்லையென வாகனத்தை மறித்த போலிஸார் : நிலைதடுமாறி கீழே விழுந்த தாய் மகன் கண்முன்னே மரணம்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களது மகன் செந்தில். இவர், கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கூலி வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில், செந்தில் நேற்றைய தினம் மேலாகுறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் அய்யம்மாளுடன் சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் வழியே செல்லும் போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வேல்முருகன் தலைமையிலான போலிஸார், திடீரென பைக்கை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

போலிஸாரின் இத்தகைய நடவடிக்கையால் பயந்துப்போன செந்தில், நிலைதடுமாறி பைக்கை அருகில் இருந்த கம்பியின் மீது மோதியுள்ளார். இதில், பின்னால் அமர்ந்திருந்த தாய் அய்யம்மாள் தவறி விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் அய்யம்மாள் தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அய்யம்மாளை மீட்டு அருகில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அய்யம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த செந்திலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே, வாகன சோதனையின் போது அத்துமிறிய போலிஸாரின் நடவடிக்கையால் தான் அய்யம்மாள் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தார் எனக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது சம்பந்தபட்ட போலிஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்கள். இதனையடுத்து கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராமநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்துவைத்தார்.

பின்னர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ்எஸ்ஐ மணி, தலைமை காவலர்கள் சந்தோஷ், செல்வம், இளையராஜா ஆகியோரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் அதிரடி உத்தரவிட்டார். போலிஸாரின் அடவாடியான வாகன சோதனையால் மகனின் கண்முன்பே அம்மா இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.