Tamilnadu

பெண்களுக்கு உதவும் ‘தோழி’ - சென்னை காவல்துறை அசத்தல் அறிமுகம்!

சென்னை மாநகரத்தில் 35 மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மகளிர் காவல் நிலையங்கள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்புப் பிரிவு உடன் இணைக்கப்பட்டு அதன் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது அதனை கையாளுவது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை மாநகர காவல்துறையில் ‘தோழி’ என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர், ''இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை மாநகரம் விளங்குகிறது. இந்த திட்டமானது போக்சோ சட்ட விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் காவலர் சீருடையில் இல்லாமல் பிங்க் நிறத்தில் சேலை அணிந்து பணியாற்றுவார்கள்.

இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்கள் பெரும் கருணையோடு இதில் பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும்” என சென்னை மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

துணை ஆணையர் ஜெயலட்சுமி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, சென்னையில் உள்ள 35 காவல் நிலையங்களில் இதற்கென 72 பெண் காவலர்கள் பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும் இந்தப் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2019 மாதம் வரை ஜூன் மாதம் வரை சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து 936 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , இதேபோல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து ஜூன் மாதம் 2019 வரை பெண்களுக்கு எதிரான 411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த அமைப்பு தொடங்கப்பட்ட கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பெண்களுக்கு எதிரான வழக்குகள் 145 பதிவு செய்யப்படாத இந்த பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரிவு தொடங்கப்பட்ட பின்னர் 29 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் முழுவதும் இது குறித்த பயிற்சி அளிக்கப்படுவதாக துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், மேற்கு மண்டல விஜயகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.