Tamilnadu

கர்ப்பிணிகள் போல நடித்து கிலோ கணக்கில் தங்கம் கடத்திய பெண்கள்: சினிமா பாணியில் அதிகாரிகள் மீது தாக்குதல்!

சென்னை விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இலங்கையில் இருந்து பாத்திமா, திரேசா ஆகிய இரு கர்ப்பிணிப் பெண்கள் வந்திறங்கினர். அந்த இரு பெண்களின் நடவடிக்கைகளில் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

அப்போது பணியில் இருந்த சுங்கத்துறை பெண் அதிகாரிகளான அம்ரூத் திரிபாதி, ரேணுகுமாரி ஆகியோர் இரு பெண்களையும் சோதனையிட்டனர். அவர்களது ஆடைக்குள் எந்தப் பொருளும் இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும், அவர்களது பாஸ்போர்ட்- விசா போன்றவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இரு பெண்களின் வயிற்றையும் ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது அவர்களது வயிற்றுக்குள் கேப்ஸ்யூல் வடிவில் ஒன்றரை கிலோ எடை கொண்ட தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர்கள் கர்ப்பிணிகள் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, உஷாரான கடத்தல் கும்பல் தனியார் மருத்துவமனை வாசலில் சுங்க அதிகாரிகளைத் தாக்கிவிட்டு, 2 பெண்களையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த சுங்க அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

வயிற்றுக்குள் தங்கம் கடத்தி வருபவர்களை வழக்கமாக சென்னை விமான நிலையத்திலேயே எனீமா கொடுத்து எடுப்பது வழக்கம். இல்லையென்றால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, அந்த இரு பெண்களையும் கடத்திச் சென்ற கும்பல் அவர்களுக்கு எனீமா கொடுத்து தங்க கேப்ஸ்யூல்களை எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டனர். அந்த இரு பெண்களும் நேற்று அதிகாலையில் மீண்டும் சென்னை விமான நிலைய சுங்க அலுவலகத்துக்கு வந்து விவரத்தை தெரிவித்தனர். இதையடுத்து அந்த 2 பெண்களிடமும் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.