Tamilnadu

பொதுமக்களே உஷார்., வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.8.50 லட்சம் கொள்ளை: - அதிர்ச்சி தகவல்!

சமீபகாலமாக வங்கி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, போலி கால் சென்டர் மூலம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அப்பாவி மக்களின் பணத்தை அபகரிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கபிரகாசம். இவர் வேளாண் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தனது சம்பள பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் இவர், சேலம் கோட்டைப் பகுதியில் உள்ள வங்கியில் நெட்பேங்கிங் கணக்கு துவக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 25-ம் தேதி தங்கபிரகாசம் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது. அந்த எஸ்.எம்.எஸில் இவர் நெட்பேங்கிங் துவக்கிவைத்திருக்கும் வங்கியின் பெயர் உள்ளிட்ட சில தகவல்களுடன் இருந்துள்ளது. இதனையடுத்து தங்கபிரகாசம் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், லிங்கில் உள்ள விவரத்தை கூறி, ஓ.டி.பி நம்பரை கூறும்படிக் கேட்டுள்ளார்.

உண்மையிலேயே வங்கியில் இருந்து பேசுவதாக நினைத்துக்கொண்ட தங்கப்பிரகாசம், செல்போனுக்கு வந்த ஓடிபி நம்பரை கூறியுள்ளார். அவர் கூறிய அடுத்த நிமிடமே அழைப்பைத் துண்டித்துள்ளனர்.

பின்னர் அடுத்த 3 நிமிடங்களில் வங்கி கணக்கில் இருந்த 8.50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளைப் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கப்பிரகாசம் அழைப்பு வந்த போன்நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அழைப்பு யாரும் எடுக்காவில்லை.

இதனால் பதறிப்போன தங்கப்பிரகாசம், வங்கிக்குச் சென்று நடந்த விவரத்தைத் தெரிவித்தார். பணம் வெறுவெறு கணக்குகளுக்கு மாறியதாகவும், பணத்தை தடுக்கமுடியவில்லை என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் வங்கி அதிகாரிகள் கொடுத்த விவரத்துடன் தங்கப்பிரகாசம் சேலம் சைபர் கிரைம் பிரிவு போலிஸாரிடம் புகார் அளித்தார்.