Tamilnadu
“நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாத வண்ணம்தான் அரசுக்கு எதிரான போராட்டம்” : அரசு மருத்துவர்கள் அறிவிப்பு!
அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இனியும் தமிழக அரசு முன்வராவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடருவதைத் தவிற வேறு வழி இல்லை என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், பிற மாநிலத்தில் மருத்துவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழகத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கும் வழங்கவேண்டும், முக்கியமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அதிகமான மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் இன்று கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இன்று நடைபெறும் போராட்டத்தில் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமிழகம் முழுவதும் கலந்துகொண்டு வருகின்றனர்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100க்கும் அதிகமான மருத்துவர்கள் திரண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.
இப்போராட்டம் குறித்துப் பேசிய, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஷ்மி நரசிம்மன், “தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 6 வாரத்திற்கு முன்பாக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எழுத்துப்பூர்வமாக நம்பிக்கை அளித்தார்.
ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக மருத்துவர்கள் செயல்பட்டு வருகிறார்கள், சுகாதாரத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் நோயாளிகளுக்கு இணையான அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லாத நிலை உள்ளது.
மேலும் காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு முடிவும் வரவில்லை.
இன்று தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். காய்ச்சல் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் மருத்துவர்கள் இன்று பணி புரிய மாட்டார்கள். ஆனால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வண்ணம் பார்த்து கொள்வோம்.” என்றார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!