Tamilnadu

2 கொலை செய்த வழக்கில் கைதான மருமகள் - விசாரணையில் மூன்றாவதாக மாமியாரைக் கொன்றதாக பகீர் வாக்குமூலம்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது மனைவி வசந்தாமணி. இவர்களுக்கு பாஸ்கர் மற்றும் சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள உத்தண்டகுமாரவலசு கிராமத்தில் வசித்துவரும் தனது மூத்த அக்கா கண்ணம்மாளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க செல்வராஜும், வசந்தாமணியும் சென்றுள்ளனர்.

அப்போது தம்பி செல்வராஜுக்கும், அக்கா கண்ணம்மாளுக்கும் முன்விரோதம் இருந்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த தம்பி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி வசந்தாமணிக்கும் சாப்பாட்டில் விஷம் கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்று, வீட்டில் பின்புறத்தில் புதைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார் கண்ணம்மாள். இந்த தகவல் பின்பு நடைபெற்ற போலிஸ் விசாரனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கு தொடர்பு இருப்பதாக கூறி கண்ணம்மாள் மற்றும் அவரது மகள் பூங்கொடி மற்றும் மருமகன் நாகேந்திரன் ஆகிய மூவரையும் போலிஸார் கைது செய்தனார். கைது செய்து சிறையில் உள்ள பூங்கொடியிடம் இதுகுறித்து போலிஸ் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் போதுதான், தனது மாமியாரை 5 மாதங்களுக்கு முன்பு பூங்கொடி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலைக்கு தனது தாய் கண்ணம்மாளும் உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

செல்வராஜ் | வசந்தாமணி

கடந்த ஆண்டு கண்ணம்மாளின் மகளான பூங்கொடி, நாகேந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் திருமணம் நாகேந்திரனின் தாயார் ராஜாமணிக்கு பிடிக்கவில்லை. அதனால் அடிக்கடி மருமகள் பூங்கொடியுடன் ராஜாமணி சண்டையிட்டுள்ளார்.

இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை பூங்கொடி தனது தாய் கண்ணம்மாளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மதுபோதைக்கு மோசமாக முறையில் அடிமையாகியிருந்த கணவன் நாகேந்திரனை குடிபழக்கத்தை நிறுவத்துவற்காக, போதை மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கே விட்டுவந்துள்ளனர்.

கணவன் இல்லாத நேரங்களில் மாமியாரின் பேச்சைக்கேட்டு இணக்கமாக இருப்பது போல நாடகமாடியுள்ளார் மருமகள் பூங்கொடி. இந்நிலையில், தங்களது ஊரில் திருவிழா நடைபெறுவதாகவும் அங்கு இருவரும் சென்றுவிட்டு வரலாம் எனக் கூறி மாமியர் ராஜாமணியை பூங்கொடி தனது தாயின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

முன்பே மாமியாரைக் கொலை செய்ய நினைத்த திட்டத்தை, தனது தாய் கண்ணம்மாளுடன் சேர்ந்து செய்ய முடிவு செய்தார் பூங்கொடி. அதன்படி மாமியாருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொல்லவும் செய்துள்ளனர். மேலும் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்து அங்கு செடியையும் நட்டுவைத்தாகவும் கூறியுள்ளார்.

பூங்கொடி | நாகேந்திரன் | கண்ணம்மாள்

இரட்டைக் கொலையை விசாரித்தபோது மேலும் ஒரு கொலை குறித்து தகவல் தெரிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மாமியர் ராஜாமணியை புதைத்த இடத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக நாகேந்திரனிடம் கேட்டப்போது, தனது தாயை காணவில்லை என்று பூங்கொடி கூறியதாகவும், அதனையடுத்தே வெள்ளகோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக நாகேந்திரன் அளித்த புகாரை போலிஸார் அலட்சியப்படுத்தி, ’காணமல் போனவர்’ என்று புகாரை கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், நாகேந்திரனின் மாமியர் கண்ணம்மாளும் அவரது மகள் பூங்கொடியும் சேர்ந்துதான் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி வசந்தாமணியை கொன்றதும், கொலை செய்தது தனக்கு தெரியாது என்றும், இந்த சம்பவம் கூட எதிர்பாராத விதமாக நடந்தது போல தான் அவர்கள் இருவரும் தன்னிடம் தெரிவித்ததாக நாகேந்திரன் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ராஜாமணியைக் கொன்று புதைத்த இடத்திற்கு கண்ணம்மாள் மற்றும் பூங்கொடியை வெள்ளகோவில் காவல்துறையினர் அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு நீதித்துறை நடுவர் கனகராஜ், தாசில்தார் புனிதவதி ஆகியோர் முன்னிலையில் ராஜாமணியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த இடத்திலேயே வைத்து உடற்கூறாய்வு நடைபெற்றது.