Tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை?- உயர்நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலிஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர், வழக்கின் விசாரணையை முடித்து இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் 2 மாத காலம் அவகாசம் வேண்டும் எனக் கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, அனுமதியின்றி கூடியவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா என விசாரிக்க வேண்டும். போராட்டத்தின் மையப்பொருள் என்ன என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இதற்காக கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

மேலும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளின் நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மீண்டும், வழக்கு விசாரணைக்கு வரும் போது, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.