Tamilnadu

“முடிந்தால் வெட்டு பார்க்கலாம்” : ரவுடிகளின் வாட்ஸ்-அப் குழுவில் சவால் விட்ட போலிஸ் அதிகாரி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் இசக்கி ராஜா. விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற உலக கிக்பாக்சிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். சிறுவயதில் இருந்தே காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்துள்ளார்.

இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம், கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வாட்ஸ்-அப் குழுவிற்குள் புகுந்து மிரட்டல் விடுத்தார். கொலைக் குற்றவாளிகளுக்கு அவர் மிரட்டல் விடுத்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில் மீண்டும் அதேபோல ரவுடிகளை மிரட்டியுள்ளார் இசக்கி ராஜா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி மாடசாமி என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார். ஜாமினில் வெளிவந்த மாடசாமி மீண்டும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தார்.

இதைத்தொடர்ந்து, மாடசாமியைத் தேடி அவரது சொந்த ஊருக்குத் தேடிச் சென்றார் இசக்கி ராஜா. இந்த தகவலை அறிந்த மாடசாமி இசக்கி ராஜாவை கொலை செய்யப்போவதாக வாட்ஸ்-அப் குழுவில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த மிரட்டலை அடுத்து மாடசாமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட இசக்கிராஜா, “நீ இருக்கும் இடத்தைச் சொல்; நான் வருகிறேன். முடிந்தால் என்னை வெட்டு பார்க்கலாம்” என்று சவால் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மாடசாமி, “நான் அப்படிச் சொல்லவில்லை” எனப் பின்வாங்கியுள்ளார். இசக்கி ராஜா பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.