Tamilnadu

வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு : தியேட்டர் ஊழியர்களை தாக்கிய அ.ம.மு.க.வினர்!

சிதம்பரம் எஸ்.ஆர் நகரைச் சேர்ந்தவர் மில்லர். இவர் அ.ம.மு.க. குமராட்சி ஒன்றியச் செயலாளராக உள்ளார். இவர் சிதம்பரத்தில் உள்ள வடுகநாதன் திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளார்.

அப்போது வாகனம் நிறுத்துவது தொடர்பாக, தியேட்டர் ஊழியருக்கும் மில்லருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த தியேட்டர் மேலாளர் வண்டியை அதற்குரிய பார்க்கிங் ஏரியாவில் நிறுத்துங்கள் என வற்புறுத்தியுள்ளார். பின்னர், மில்லர் தனது வாகனத்தை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சினிமா காட்சி முடிந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

பின்னர் இரவு மில்லர் அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட15 பேரை இருப்பு பைப் போன்ற ஆயுதங்களுடன் அழைத்துக்கொண்டு தியேட்டருக்குச் சென்று ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், அங்கு இருந்த பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தடுக்க சென்ற திரையரங்கு மேலாளர், ஊழியர்களையும் பலமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மேலாளர் மரிய அலெக்சாண்டர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தாக்கியது அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து அ.ம.மு.க நிர்வாகி மில்லர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 7 பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.