Tamilnadu
கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் பஞ்சாமிர்தத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை - சென்னையில் அதிர்ச்சி!
அரசு வேலை பெறுவதற்காக கொடுத்த 4 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டதால், ஆத்திரமடைந்து பஞ்சாமிர்தத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். கார்த்திக்கிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக வேலாயுதம் என்பவர் ரூபாய் 4 லட்சம் பெற்றுள்ளார்.
வேலாயுதம் சொன்னபடி வேலை வாங்கித்தராமல் காலம்கடத்தி வந்துள்ளார். பணம் கொடுத்து 4 வருடங்கள் ஆகியும் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்யாததால் அதிருப்தியடைந்த கார்த்திக் வேலாயுதத்திடம் அடிக்கடி வேலை பற்றி கேட்டு வந்ததோடு, பணத்தையாவது திருப்பிக் கொடுத்துவிடும்படி வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை கார்த்திக்குக்கு போன் செய்த வேலாயுதம், அரசு வேலைக்கு அழைப்புக் கடிதம் வந்துள்ளதாகவும், வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தால் தருவதாகவும் கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய கார்த்திக், தனது மனைவி சரண்யாவை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வேலாயுதம், கோவில் பிரசாதம் எனக்கூறி இருவருக்கும் பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளார்.
பஞ்சாமிர்தத்தைச் சாப்பிடும்போதே கார்த்திக்குக்கு தொண்டை எரிச்சலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தேகமடைந்த அவர், தனது மனைவி சரண்யாவிடம் அதைச் சாப்பிட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
ஆனால், அதற்குள் சரண்யாவும் அதை சாப்பிட்டதால் அவருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இருவரும் இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளனர். ஆனால், போகும் வழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார் கார்த்திக். தொடர்ந்து, சரண்யாவும் மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார்த்திக்கின் பிரேத பரிசோதனையில் அவர் சாப்பிட்ட பிரசாதத்தில் சல்ஃபியூரிக் ஆசிட் கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலிஸார் வேலாயுதம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டமிட்டு, பிரசாதத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்ற வேலாயுதம், கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் பணிபுரிந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!