Tamilnadu

“கீழ்த்தரமான கருத்துகளை பரப்பும் விஷமிகள்” : சமூக ஆர்வலர் சுந்தரவள்ளி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி. இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தில் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். மேலும் ஜனநாயக அரசியல் அமைப்பு நடத்தக்கூடிய நிகழ்வுகளிலும் முன்னின்று போராடிவருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மத்திய - மாநில அரசுகளின் தவறான நடவடிக்கைகளை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருபவர். இவர் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆளுமைகளும் மத்திய மாநில அரசுகளை விமர்சித்தே வருகின்றனர்.

இதில், பேராசிரியர் சுந்தரவள்ளி பெண் என்ற காரணத்திற்காக பா.ஜ.க மற்றும் இந்துத்துவா அமைப்பினர் போன்றோரால் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். இவர் மீது தொடர்ச்சியான அவதூறு தாக்குதல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் பா.ஜ.க மற்றும் இந்துத்துவா அமைப்பைச் சார்ந்தவர்கள் பேராசிரியர் சுந்தரவள்ளி பற்றிய அவதூறு கருத்துக்களைத் தெரிவித்துவந்தனர்.

இதனையடுத்து, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதவர்கள் அவர்மீது அடுத்தடுத்து அவதூறுகளை பரப்பிவருவதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவிலும், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் கடிதத்தில், அவர் பற்றி பரப்பப்பட்ட அவதூறு கருத்துகளைக் குறிப்பிட்டு, இதுபோல புகைப்படம், மற்றும் கருத்துகளை என் பெயரில் வாட்ஸ்அப் குழுக்களை ஆரம்பித்து அதில் பகிர்ந்து வருகிறார்கள். எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “என்னை விபச்சார வழக்கில் கைது செய்ததாக புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பியதைப் போல போலியாக செய்தி ஒன்றையும் தயாரித்து பரப்பி வருகின்றனர்.

இது எனது பொதுவாழ்க்கையை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே, அவர்கள் மீது பெண் கொடுமை வன்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார். அவருடன் த.மு.எ.க.ச மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு புகார் அளித்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் சுந்தரவள்ளி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தொடர்ந்து அரசியல் ரீதியாக பொதுவெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் மீது தரம்தாழ்ந்த தாக்குதல்களை ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் முன்வைத்து வருகின்றனர்.

இது புதிதாக அரசியல் தளத்திற்கு வருகிற பெண்களை அச்சப்பட வைக்கும். முட்டுக்கட்டையாகவும் மாறும் என்கிற சூழலில் இதுகுறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முயல்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.