Tamilnadu

அக்டோபர் 23ம் தேதி தொடங்குகிறது தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ''எப்போதும் போல ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

தாம்பரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லக்கூடிய மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த அனைத்து பேருந்து நிலையங்களையும் ஒன்றிணைக்க மாநகரப் பேருந்துகள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படும். அக்டோபர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பேருந்துகளுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கிய நிலையில், சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் மாதம் 23ம் தேதி தொடங்கும். பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் போக்குவரத்துத் துறை செய்துள்ளது'' என்றார்.