Tamilnadu
“5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும்” : மாணவர் அமைப்பினர் போராட்டம்!
தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பள்ளிகளில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தார்.
மேலும் இதனால் மாணவர்களின் கல்வித்திறன் வளரும் எனக் கூறி இத்திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் மாணவர் சங்கம், ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டத்திற்கு தலைமைதாங்கிய மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக தமிழக அரசு கேட்கிறது. தமிழக மாணவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. புதிய கல்விக்கொள்கை திட்டத்தில் அமல்படுத்தப்படும் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
மேலும் இந்தத் திட்டத்தினால் மாணவர்கள் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தும் அபாயம் உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். உடனடியாக இந்த புதிய கல்விக்கொள்கை திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யவில்லை என்றால் இதைவிட மாபெரும் போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம்.” என்று எச்சரித்துள்ளார். இந்தப் போராட்டத்தின் காரணமாக அனைத்து வகுப்புகளையும் புறக்கணிப்பதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
Also Read
-
ரூ.1,248.24 கோடியில் 10 சாலைகள், 2 மேம்பாலங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகள் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!