Tamilnadu

“கடல் உணவு வகைகளில் கலக்கும் சுந்தரி அக்கா கடை” : பாதுகாப்பான உணவு என உணவு பாதுகாப்புத் துறை அங்கீகாரம்!

சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை மற்றும் நீச்சல் குளத்திற்கு இடையே தள்ளுவண்டியில் உணவுக் கடை நடத்திவருபவர் சுந்தரி. இவரது கடையின் உணவுக்காக சென்னைவாசிகள் பலர் வாடிக்கையாளராக மாறியுள்ளனர்.

மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ‘சுந்தரி அக்கா’ கடை என அழைப்பார்கள். இவரது கடை தொடர்பாக பல செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் ‘சுந்தரி அக்கா கடை’ பிரபலமான கடையாக திகழ்ந்து வருகிறது. மீன், இறால் என வகை வகையான கடல் சார்ந்த அசைவ உணவுகள் இவரது கடையில் கிடைக்கும்.

நியாயமான விலை என்பதால் மதிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த அங்கீகாரத்துடன் தற்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆகியவை இவரது கடைக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதாக அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளன. அதில், மிகவும் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுந்தரி அக்கா மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.