Tamilnadu
“வடிகால்கள் தூர்வார ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?” : அ.தி.மு.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?
காவிரி பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் கடைமடை பகுதிகளில் தண்ணீர் வரவில்லை என அப்பகுதி விவசாய மக்கள் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.
தண்ணீர் விவகாரத்தில் எந்த அக்கறையும் இல்லாமல் செயல்படும் அ.தி.மு.க அரசு மராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றது. அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும் இதுவரை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. சாகுபடி பணிகள் தொடங்கவில்லை. பாசன வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மற்றும் மராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.
இப்பணிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, சுயநல ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காலதாமதமாக தொடங்கி, ஒதுக்கப்படும் நிதியை பங்கிட்டுக் கொள்ள வழிவகை காணப்படுகின்றது. இதன் விளைவாக கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். மறுபக்கம் எவ்வித பயன்பாடும் இன்றி தண்ணீர் கடலுக்குச் செல்கின்ற கொடுமை நடந்து வருகின்றது.
சென்ற ஆண்டு மட்டும் 227 டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு சென்று வீணானது என தெரிவிக்கப்படுகிறது. காவிரி, வெண்ணாற்றில், கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் மட்டுமே மழைக்கால உபரி தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடியும் என்பதை அறிந்திருந்தும் அஇஅதிமுக அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் நடப்பாண்டிலும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28-ல் மூடப்படுவது வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி முதல் மே வரையிலான காலங்களில் தூர்வாருதல் மற்றும் மராமத்து பணிகளை முழுமையாக செய்து முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் வேண்டுமென்றே ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி பணிகளை அரைகுறையாக செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற முறைகேடாகும்.
இவ்வாண்டு மேற்கொண்ட பணிகள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், தண்ணீர் சேமிப்பு தடுப்பணைகள் கட்டுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!