Tamilnadu

மூன்று மாதங்களில் அதிகரித்த வங்கி மோசடி ; ரூ.32 ஆயிரம் கோடியை இழந்த வங்கிகள் : ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல் !

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. அதில் பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வங்கிகளில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 பொதுத் துறை வங்கிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் குரு. இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற மோசடி சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, பாரத் ஸ்டேட் வங்கியில் 12 ஆயிரத்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அதுதொடர்பாக 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து அலகாபாத் வங்கியில் 2 ஆயிரத்து 855 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அது தொடர்பாக 381 மோசடி வழக்குகள் நடந்து வருகின்றன.

இதேபோன்று, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.