Tamilnadu
தலைமை நீதிபதி இடமாற்றம்: “ரமாணி மட்டுமின்றி, ஒட்டு மொத்த பெண்களையும் அவமதிப்பது போன்றது” : பிருந்தா காரத்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமாணியின் பதவி விலகல்தான் தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தஹில் ரமாணி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார்.
இன்னும் ஓராண்டு காலம் மீதமிருக்கும் நிலையில் மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து கொலிஜியம் (உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த முடிவை பரிசீலனை செய்யக்கோரி தஹில் ரமாணி அனுப்பிய கடிதம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், கொலிஜியத்திற்கும் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
நீதிபதியின் இந்த ராஜினாமா முடிவு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியிருப்பதாவது, “சென்னை நீதிபதி தஹில் ரமாணியை இடமாற்றம் செய்ததும், அதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாட்டில் ஒரு சிலர்தான் பெண் நீதிபதிகளாக உள்ளனர். இந்நிலையில், அவர்களும் இந்த மாதிரி நெருக்கடியை அளிப்பது, நீதிபதி தஹில் ரமாணியை மட்டுமின்றி, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பது போன்று உள்ளது.
அதுமட்டுமின்றி, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் அவரும் ஒருவர். அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் ஏன் இடமாற்றம் என்ற கேள்வி எழுகிறது. 75 நீதிபதிகள் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து, 2 நீதிபதிகள் மட்டும் இருக்கும் மேகாலாயா உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை மாற்றுவதை வழக்கமான செயலாக கருத முடியாது.
இது பதவியிறக்கம் என்றே தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த சம்பவங்களை பார்க்கும்போது, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் திருப்தி அளிக்காத நிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !