Tamilnadu

ஆளுநரின் தலையீட்டால் அட்மிஷனை ரத்து செய்த சென்னை பல்கலைக்கழகம் : நடவடிக்கையை எதிர்த்து மாணவர் புகார்!

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும் ஆளுநரின் செயல்பாடு பா.ஜ.க அரசுக்கு சாதகமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும் பல்கலைக்கழக நடவடிக்கையில், ஆளுநர் தலையிட்டு அதிகார மீறலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் முதுகலை முதலாமாண்டு மாணவர் கிருபாமோகன் ஃபேஸ்புக்கில் புகார் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், தான் பல்கலைக்கழக விதிகளின் அடிப்படையில், படிப்பில் சேர்ந்து ஒரு மாதமாக வகுப்புகளுக்குச் சென்றுள்ள நிலையில் தன்னை அழைத்த தத்துவவியல் துறைத்தலைவர் வெங்கடாஜலபதி, தனது சேர்க்கையை ரத்து செய்ய அழுத்தம் தரப்படுவதால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

துறைத்தலைவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவர் கிருபா மோகன் “எனது கல்விச் சான்றிதழ்களிலிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ ஏதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய சேர்க்கையை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டுள்ளார்.

அதற்கு துறைத்தலைவர் பேரா.வெங்கடாஜலபதி, “நீங்கள் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது சேர்க்கையை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளுநர் மாளிகையில் இருந்தும் எனக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். ” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து 29ம் தேதி மாணவர் கிருபாமோகனை பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென நீக்கியுள்ளது. மாணவர் தகுதிச் சான்றிதழ் கொடுக்காததால் நீக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் மாணவரின் சேர்க்கையை ரத்து செய்து அவரைப் பழிவாங்கியுள்ளது. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவரை நீக்கியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதனையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக உயர்கல்வித்துறை செயலாளரிடம் புகார் அளிக்கப்போவதாக மாணவர் கிருபா மோகன் தெரிவித்துள்ளார். தன்னை நீக்க ஆளுநர் மாளிகை அழுத்தம் தந்ததாகக் குற்றம்சாட்டியுள்ள மாணவரின் பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.