Tamilnadu

விநாயகர் சதுர்த்தி பண வசூலில் தகராறு : நண்பரைக் குத்தி கொலை செய்த இளைஞருக்குப் போலிஸ் வலைவீச்சு

விநாயகர் சதுர்த்தி திருவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் அந்த அந்த பகுதியில் உள்ள இளைஞர்களே பணம் வசூல் செய்து விழாவை நடத்தினர். திருச்சியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பணம் வசூலிப்பது தொடர்பான பிரச்னையில் நண்பரையே குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி கிராமம், சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு பார்த்தசாரதி மற்றும் அவரது நண்பர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து செய்துள்ளனர்.

அந்தத் தொகையில் அப்பகுதியில் விநாயகர் சிலை ஒன்றையும் வைத்து நேற்றைய தினம் வைத்துள்ளனர். விழா முடிந்த பிறகு இரவு, பார்த்தசாரதி மற்றும் வசூலில் ஈடுபட்டவர்கள் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அந்த சமயத்தில் வசூல் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாக்குவாதத்தில் தினேஷ் பணத்தை திருடி விட்டதாகவும் வசூல் செய்தவர்களை ஏமாற்றியவிட்டதாகவும் பார்த்தசாரதி சக நண்பர்களிடம் கூறியுள்ளார்.

பார்த்தசாரதி

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் பார்த்தசாரதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கூடியிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

ஆனாலும் சமாதானம் அடையாத தினேஷ், இரவு 1 மணியளவில் இந்நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதியின் கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார்.

இதனைத் தடுக்கச் சென்ற நண்பர் கார்த்திகேயனையும் தினேஷ் கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவத்தை அறிந்த லால்குடி போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தசாரதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த கார்த்திகேயன் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக லால்குடி போலிஸார் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமாரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.