Tamilnadu

சாதிப் பிரச்சனை இல்லை என்றால், சடலத்தை கயிறு கட்டி இறக்கியது ஏன் ? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். குப்பன் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதனால், குப்பனின் உடலை பாலாறு மேம்பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே இறக்கி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியானது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் முறையீட்டை ஏற்று உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மயானத்திற்குச் செல்லும் பாதை பட்டா நிலம் எனவும், அதன் உரிமையாளர்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் அனுமதித்திருப்பார்கள் எனவும், மயானத்திற்கு செல்ல எவரும் அனுமதி மறுக்கவில்லை எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாராயணபுரம் கிராமத்தில் சாதி பாகுபாடு ஏதும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிறகு ஏன் சடலத்தை பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி இறக்கி கொண்டு செல்லப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.