Tamilnadu
ஆதி திராவிடர்களுக்கு மட்டும் ஏன் தனி மயானம் ? சாதிப்பிரிவினையை ஊக்குவிக்கிறதா அரசு ? : நீதிபதிகள் கேள்வி
வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்குச் சுடுகாட்டிற்குச் செல்ல வழி இல்லாததால் சடலத்தை பாலத்தில் இருந்து கட்டி கீழே இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் குறித்து அரசு எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குப்பன் என்கிற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் பலியானர். பின்பு அவரின் உடலுக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்து தகனம் செய்ய சுடுகாட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது ஆதிக்க சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வழக்கமாக சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையில் இரும்பு முள் வேலி அமைத்து பாதையை மூடியுள்ளார். இதனால் சுடுகாட்டிற்குச் செல்ல வேறு வழி இல்லாததால் சடலத்தை பாலத்தில் இருந்து கட்டி கீழே இறக்க முடிவு எடுத்துள்ளனர். 20 அடி பாலத்தில் சடலத்தைக் கயிற்றால் கட்டி கீழே இறக்கியுள்ளனர்.
பின்னர் ஆற்றின் கரையோரத்தில் இருந்த சுடுகாட்டிற்கு சடலத்தைத் தூக்கிச் சென்று தகனம் செய்தனர். சாதிய ஒடுக்குமுறை காரணமாக நிகழ்ந்த இந்தக் கொடுமை அப்பகுதி மக்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி வெளிவந்ததை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
பின்பு வாணியம்பாடி வட்டாட்சியர் அந்தப் பகுதியில் இது தொடர்பாக ஆய்வு நடத்தினார். இதற்குப் பிறகு, நாராயணபுரம் ஊராட்சி பனந்தோப்பு பகுதியில் அரசுக்குச் சொந்தமாக உள்ள 3.16 ஏக்கர் நிலத்தில், 50 சென்ட் நிலம் ஆதி திராவிடர்களின் இடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. தகன மேடை அரசின் சார்பில் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஊடகங்களில் வெளியான இது தொடர்பான செய்திகளை வைத்து சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாராயணபுரம் கிராமத்தில் இருக்கும் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு மட்டும் தனி மயானம் அமைத்துள்ளதாக மாவட்ட தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் பேசிய நீதிபதிகள், நாராயணபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு மட்டும் தனி மயானம் அமைக்குவிருக்கும் நடவடிக்கைக்கு கடும் அதிருப்பதியை தெரிவித்தார்.
மேலும் “தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர்களுக்கு என தனி மருத்துவமனைகளோ, அரசு அலுவலங்களோ மற்றும் காவல் நிலையங்களோ இல்லத போது ஏன் தனி மயானம். ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானத்தை அரசு அமைத்துக் கொடுப்பது, சாதி பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளது”.
அதுமட்டுமின்றி, “தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க அரசாணை பிறப்பித்து உத்தரவிட்ட போதும், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு இயங்கும் பள்ளிகளுக்கு 'ஆதிதிராவிடர் நலப்பள்ளி' என்ற பெயரை நீக்காதது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!