Tamilnadu
திருத்தணியில் வாலிபர் கொடூர கொலை : கொலையாளிகளைப் பிடித்து கை, காலை உடைத்து ‘மாவுக்கட்டு’ போட்ட போலிஸ் !
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் நடந்து சென்ற வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி ஹோட்டலுக்குள் வைத்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை, பட்டப்பகலில் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட திருத்தணி போலிஸாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன.
அதாவது, கொலையுண்ட இளைஞர் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நாகவேடு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 22. வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில்தான் மகேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற வாலிபால் போட்டியில் ஏற்பட்ட பிரச்னையால், அப்பகுதியைச் சேர்ந்த இன்பராஜ் மற்றும் விமல் ஆகிய இருவரின் தலைமையில் தனித்தனி குழுக்களாக பிரிந்தனர். இதில், இன்பராஜ் குழுவை சேர்ந்தவர்தான் மகேஷ்.
இருக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் இன்பராஜ் தரப்பினர் விமல் குழுவில் உள்ள லல்லு என்ற நபரை முதலில் படுகொலை செய்துள்ளனர். இதற்கு பழி தீர்க்கும் விதமாக 6 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் இன்பராஜின் நண்பனான விக்னேஷை விமல் தரப்பு படுகொலை செய்தது.
விக்னேஷை விமல் தரப்பு கொலை செய்ததை நேரில் பார்த்த மகேஷ், நீதிமன்றத்தின் சாட்சியம் அளித்துள்ளார். இதனால் அச்சமடைந்த மகேஷ் குடும்பத்தினர் அவர்களது சொந்த ஊரான அரக்கோணம் நாகவேடு கிராமத்துக்கு 5 மாதங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் விக்னேஷை படுகொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வேப்பம்பட்டில் உள்ள சலூன் கடையில் இருந்த தினேஷை இன்பராஜ் தரப்பினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஆனால் தினேஷ் உயிர் பிழைத்துவிட்டார்.
இதனையடுத்து, தினேஷை கொல்ல முயற்சித்ததால் இன்பராஜின் ஆதரவாளர்கள் நால்வரை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் (ஆக.,16) ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் அவர்களை பார்த்துவிட்டு ஊர் திரும்பும் வேளையில் தான் மகேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், விமல்ராஜ், ராஜ்குமார், கோபிராஜ் மற்றும் கார் ஓட்டுநர் சதீஷ் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பேரின் கை, கால்களிலும் முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டும் போடப்பட்டுள்ளது. அதற்கு, கைது செய்யும் போது தப்பிக்க முயற்சித்தபோது தவறி விழுந்ததில் அடிபட்டதாக போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியின் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதை சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருந்தும், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!