Tamilnadu

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மாதர் சங்கம் போராட்டம் : போக்சோ சட்டத்தில் காப்பக நிர்வாகி கைது!

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பெண் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்திவந்துள்ளது. இந்த காப்பகம் 1996ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த காப்பகத்தில் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் காப்பகத்தின் பாதுகாவலராக இருந்த ஆதிசிவன் என்பவர் அங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் பாலியல் தொல்லைக் கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகள் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே மாதர் சங்க நிர்வாகிகள் காப்பகத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காப்பக பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர் மாதர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அமைப்பினர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிகப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அதிசிவன் மீது மாணவர்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் ஆதிசிவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.