Tamilnadu

சாதியை குறிக்கும் வகையிலான வண்ணக் கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணிய தடை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக்கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணிவதனை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை இதுவரை பள்ளி நிர்வாகங்களும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதன்முலம் பள்ளிகளே மாணவர்களின் பிரிவினை எண்ணத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கைக்குள் கொண்டு வர முடியும் என தெரிவிக்கின்றனர். மேலும், அந்த உத்தரவு கடிதம் அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் இந்த பிரிவினை உணர்வை சாதியவாதிகளும், சில ஆசிரியர்களும் கூட ஊக்குவிப்பதாக தெரிய வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைக் கல்வி அலுவலர் அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும். பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.