Tamilnadu

பொதுமக்களின் புகாரையடுத்து, ஹெல்மெட் அணியாமல் சென்ற போலீஸ் சஸ்பெண்டு!

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும்போது, அதிகமானோர் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.

மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும், ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், போலீசார் தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீசார் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் மதன். இவர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். இதனை பொதுமக்கள் படம் பிடித்து சமீபத்தில் சென்னை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.சி.டி.பி. செயலி மூலம் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் மதன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தென்சென்னை இணை கமி‌ஷனர் மகேஸ்வரி பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.