Tamilnadu

கல்வி உதவித்தொகை வழக்கு: மத்திய - மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகை கிடைப்பதில்லை என சமீபத்தில் புகார் எழுந்தது. மேலும் இதனால் மாணவர்களின் கல்வி பாதியிலேயே நிறுத்துக்கொள்ளும் அவலநிலையும் ஏற்படுவதாகவும், மத்திய மாநில அரசுகள் மாணவர்கள் கல்வி உதவி தொகையை வழங்கவேண்டும் என மாணவர் இயக்கங்கள் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இதனை எதிர்த்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பையா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, "எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

ஆனால் 2018-19-ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது இந்த திட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதமானதும் ஆகும். எனவே இந்த உத்தரவுகளை ரத்துசெய்து தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு மத்திய மாநில அரசுகள் 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.