Tamilnadu
ஹெல்மெட் கட்டாயம்: போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் போது இதில் அதிகமானோர் ஹெல்மெட் இல்லாததால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.
இது தொடர்பான விபத்துகளில் தலையில் அடிபட்டு உயிரிழந்தவர்கள், காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் எத்தனை பேர் போன்ற தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை மாநகர ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு அரசு தரப்பு தெரிவித்தது. மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு கூறியது.
இதனையடுத்து, 100% பேர் ஹெல்மெட் அணிவதில்லை என்றால், 100 % வழக்குகள் பதிவாகாதது ஏன்? கடற்கரை சாலையில் உள்ள போலீசாருக்கு சாலையோரம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் படியும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதா என அரசுக்கு சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், பைக்கில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்யவேண்டும் எனவும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் அறிக்கை திருப்திகரமாக இல்லையெனில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Also Read
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!