Tamilnadu

காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு !

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4ஆவது கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடும்படி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

‘கர்நாடகா அரசு தண்ணீர் வழங்காததாலும், நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 21-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரையும் கர்நாடக அரசு இன்னும் முழுமையாக வழங்கவில்லை. ஜூன், ஜூலையை தொடர்ந்து வரும் மாதங்களுக்கான நீரையும் சேர்த்து 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்’ என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. மேலும், மழை அளவு மற்றும் காவிரியில் உள்ள நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.