Tamilnadu

அப்போ வறட்சி இல்ல... இப்போ மழைவேண்டி யாகம் : முரண்பாட்டின் மொத்த உருவமான எஸ்.பி.வேலுமணி!

வரலாறு காணாத தண்ணீர் வறட்சி தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. மக்கள் இரவு பகல் பாராமல் தங்களது அன்றாட வாழ்வின் விருப்பு வெறுப்புகளை மறந்து ஒரு குடம் தண்ணீருக்காக போராடி வருகின்றனர்.

அதேசமயத்தில், ஆட்சியில் உள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ தமிழகத்தில் வறட்சி எல்லாம் இல்லை அப்படிச் சொல்லப்படுவதெல்லாம் வதந்தி எனப் பேசியிருக்கிறார். இவரைவிட முதலமைச்சர் பழனிசாமியோ ஒருபடி மேலே சென்று மக்களுக்கான தண்ணீர் பிரச்னையைப் போக்க முடியாமல் நானே இரண்டு வாளி தண்ணீர்தான் உபயோகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார்.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீரைக் கேட்டுப் பெறாமல், தற்போது தமிழகம் எங்கும் நிலவும் தண்ணீர் பிரச்னையை போக்கவும், மழை வரவேண்டியும் அ.தி.மு.க அரசு யாகம் நடத்தி சமாளித்து வருகிறது.

அவ்வகையில், வறட்சியே இல்லை எல்லாம் வதந்திதான் என்றுக் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேவாலயம், தர்கா, கோவில் என அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மாங்கு மாங்கென்று தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி வழிபட்டும், யாகம் நடத்தியும் வருகிறார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் மழை வருவதற்கு மரங்களை வளர்ப்பதுதான் முக்கியமான வழி. எனவே மக்கள் அனைவரும் மரங்களை வளர்க்கவேண்டும் எனப் பேசியுள்ளார். மேலும், மழைநீர் சேமிப்பு திட்டத்தை அனைவரும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக லட்சக்கணக்கான மரங்களை வெட்டி, விவசாய நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசும், மாநில அ.தி.மு.க அரசும் ஈடுபட்டு வருவதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறந்துவிட்டார் போலும்.