Tamilnadu

நீட் தோல்வியால் தற்கொலை : மாணவிகள் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியதா?

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 2017ம் ஆண்டு மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து மாணவர்கள், அரசியல் கட்சியினர் என தமிழகத்தில் பல சமூக அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொள்ளாமல் மாணவர்களை பாதுகாப்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படாததால் தமிழக அரசு மீது உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார்.

அவர் அளித்த மனுவில், " நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருப்பூரை சேர்ந்த ரீத்துஸ்ரீ, விழுப்புரத்தை சேர்ந்த மோனிஷா, தஞ்சாவூர் புதுக்கோட்டை சேர்ந்த வைஷ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசுத் தரப்பில் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. எனவே, இந்த மாணவிகளின் குடும்பத்திற்கு உரிய அரசு நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மாணவ, மாணவிகள் தற்கொலையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும்ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வியெழுப்பினார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அரசே நீட் தேர்வுக்கான பயிற்சிகளை இலவசமாக தருகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்தது குறித்த விவரங்களையும், தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா என்பதையும் அரசு 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.