Tamilnadu

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் : மருத்துவமனைகளில் 50,000 நோயாளிகள் பாதிப்பு 

தமிழத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த தண்ணீர் தட்டுப்பாடு சென்னையை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாமல் நோயாளிகள் சிரமம் அடைந்து வருவதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தாய்சேய் நல மருத்துவமனை என 15-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட உள்நோயாளிகள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களை பார்க்க வருபவர்கள், உடன் இருப்பவர்கள், ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால் குடிநீர் வாரியம் 60 லட்சம் லிட்டர் தண்ணீரை மட்டும் வழங்கி வருகிறது. பற்றாக்குறையாக உள்ள 40 லட்சம் லிட்டர் தண்ணீரை நிலத்தடி நீரை மருத்துவமனைகளின் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.

ஆனால் தற்பொழுது நிலத்தடி நீர் அதிகளவில் குறைந்து விட்டதால் நிலத்தில் இருந்து நீர் எடுக்கமுடியாது சூழல் உருவாகியுள்ளது. குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் மருத்துவமனைகளுக்கு போதவில்லை.

தண்ணீர் தட்டுப்பாடு என்ற காரணத்தினால் அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிவறைகள் பலவற்றை மருத்துவமனை நிர்வாகம் கழிப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

மேலும் திறந்து வைத்துள்ள கழிவறைகளில் சில நேரங்களில் போதிய அளவில் தண்ணீர் வருவதில்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமம் அடைந்து வருவதாக நோயாளிகளின் குடும்பத்தினர் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், தமிழக அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.