Tamilnadu

+1, +2 மாணவர்களுக்குப் பாடங்கள் குறைப்பு: பரிசீலனை செய்கிறது அரசு - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. அதில், 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முறையில் 200 மதிப்பெண்களுக்கு பதில் 100 மதிப்பெண்களாக மாற்றப்பட்டு அமலுக்கு வந்தன.

அதனையடுத்து, மொழிப் பாடங்களுக்கு இரண்டு தாள்கள் இருந்த நிலையில் தற்போது ஒரே தாளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பரிசிலீனை ஆவணம் முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பின்பு இது குறித்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதில், +1, +2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் இருந்த நிலையில் தற்போது 5 பாடங்களாக குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இளநிலை பட்டப்படிப்பில் பொறியியல் தேர்வு செய்யும் மாணவர்கள் 11ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை மட்டும் படித்தால் போதும். உயிரியல் பாடத்தை தேர்வு செய்ய வேண்டாம்.

அதேபோல், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 11ம் வகுப்பில் கணிதப் பாடத்தை தேர்வு செய்யத் தேவையில் இல்லை. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என 5 பாடங்களைப் படித்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்பு கல்வி முறையில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்துவதற்கு பரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டால் 600 மதிப்பெண்களுக்கு பதில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவர்.